ஆய்வு விளக்கம்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்’ என்னும் தலைப்பை ஆய்வுப் பொருளாகக் கொண்டுஇவ்வாய்வுஅமைகின்றது.
ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா? என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது.
ஒவ்வொரு மொழிக்கும் என்று தனியான பண்பாட்டுக் கூறுகளும், கட்டமைப்பும் உண்டு. அவ்வாறு இருந்தால்தான் அது தனிப்பட்ட மொழி என நிலைநாட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழ்மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழியினை த்தொலைக்காட்சி பயன்படுத்தினால் சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா,என்பது அடுத்த கருதுகோளாக அமைகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழி வேறுபட்டுக் காணப்படுவதால் செய்யுள்மொழி, கவிதைமொழி, பத்திரிகை மொழி என இருப்பது போன்று தொலைக்காட்சிக்கெனத் தனிமொழி ஒன்று உருவாகுமா, என்பதை ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டுமுறை ஆய்வு, மதிப்பீட்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை உள்ளடக்கி ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.அவை
1. முன்னுரை
2. நிகழ்ச்சிகளின் வகைப்பாடு
3. மொழிப்பயன்பாடு
3.1 நிகழ்ச்சிகளில் மொழிப்பயன்பாடு
3.2 விளம்பரங்களில் மொழிப்பயன்பாடு
4. பிற மொழிப் பயன்பாடு
4.1 நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பயன்பாடு
4.2 விளம்பரங்களில் பிறமொழிப் பயன்பாடு
5. சமுதாயத் தாக்கம்
5.நிகழ்ச்சிகளில் ஏற்படும் சமுதாயத் தாக்கம்
5.2 விளம்பரங்களில் ஏற்படும் சமுதாயத் தாக்கம்
6. முடிவுரை என்பனவாகும்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.